திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் ரூ.155 கோடியில் சர்வதேச தரத்தில் மருந்து பூங்கா


திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் ரூ.155 கோடியில் சர்வதேச தரத்தில் மருந்து பூங்கா
x

திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் ரூ.155 கோடியில் சர்வதேச தரத்தில் மருந்து பூங்கா அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் 111 ஏக்கர் பரப்பளவில், ரூ.155 கோடி திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள மருந்து பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க மையத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.9.75 கோடி பங்கு முதலீடு செய்வதற்கான ஒப்புதல் ஆணைகளையும், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.1.25 கோடி நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.

மருந்து பூங்கா

மருந்து பூங்கா அமைப்பதற்கான திட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக ரூ.51.56 கோடி மற்றும் மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.20 கோடியில் பொது வசதி மையம், உலகளாவிய தரக்கட்டுப்பாட்டு சோதனை மையம், பூஜ்ய திரவ வெளியேற்றத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மருந்து பொருட்களை சேமிப்பதற்கான சேமிப்பு கிடங்கு போன்றவை அமைக்கப்பட உள்ளன.

இந்த பூங்காவில் 40-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அமைக்கப்படுவதன் மூலம் சுமார் 6 ஆயிரம் பேர் நேரடியாகவும், 10 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவர்.

ரூ.50 கோடியாக உயர்வு

புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தப் பிரிவுகளைச் சார்ந்த தொழில்முனைவோர்களால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்க கடந்த நிதி ஆண்டில் ரூ.30 கோடி நிதியுடன் இந்த நிதியம் தொடங்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில் ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்திருந்த நிறுவனங்களில் இருந்து தகுதியான நடுவர் குழுவின் வாயிலாக 2-ம் கட்டமாக 8 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

ரூ.9.75 கோடி பங்கு முதலீடு

மேம்பட்ட உற்பத்தி துறையில் இயங்கும் குகன் இண்டஸ்ட்ரியல் மேனுபேக்சரிங் சொல்யூசன்ஸ், பொழுதுபோக்கு ஊடகத்துறையில் இயங்கும் ஷார்ட் பண்ட்லி, கட்டிடவியல் துறையில் இயங்கும் ஸ்பிரிண்ட் 6, செயற்கை நுண்ணறிவு துறையில் இயங்கும் இண்டியா ஸ்பீக்ஸ், மருத்துவத் தொழில் நுட்பத் துறையில் இயங்கும் டெஸ்டிராட்டம் சொல்யூசன்ஸ் ஆகிய நிறுவனங்களும், பழங்குடியினரால் தொடங்கப்பட்டுள்ள தாளவாடி பசுமை எரிபொருள் தயாரிப்பு நிறுவனம், நம்சந்தை - கோத்தகிரி டிரைபல் பிரைவேட் லிமிடெட், சோழகர் டிரைபல் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களும் பங்கு முதலீட்டை பெற தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

அந்த நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.9.75 கோடி பங்கு முதலீடாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பங்கேற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு சிட்கோ நிர்வாக இயக்குநர் சோ.மதுமதி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் இயக்க இயக்குநர் சிவராஜா ராமநாதன், இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெ.ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story