இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகள்


இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகள்
x

13 மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிதாக கட்டப்பட்ட 1,591 வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

வேலூர்

13 மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிதாக கட்டப்பட்ட 1,591 வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இலங்கை தமிழர்கள்

தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக 104 தற்காலிக முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் 19 ஆயிரத்து 498 குடும்பங்களை சேர்ந்த 58 ஆயிரத்து 272 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாம்களில் உள்ள பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தரப்படும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-22 சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, இலங்கை தமிழர்கள் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள் புதிதாக கட்டி தரப்படும்.

இதில் முதற்கட்டமாக ரூ.176 கோடியே 2 லட்சம் செலவில் 3 ஆயிரத்து 510 வீடுகள் கட்டி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் 20 மாவட்டங்களில் உள்ள 35 இலங்கை தமிழர் முகாம்களில் 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டும் பணி தொடங்கி நடைபெற்றது.

19 முகாம்கள்

இதில் வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் முகாமில் ரூ.11 கோடியில் 220 வீடுகளும், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் ரூ.21 கோடியில் 420 வீடுகளும், சேலம் மாவட்டத்தில் பவளத்தானூர் முகாம், அத்திக்காட்டானூர் முகாம் மற்றும் குறுக்குப்பட்டி ஆகிய முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ரூ.13 கோடியே 22 லட்சத்தில் 244 வீடுகளும், தம்மப்பட்டி முகாமில் 20 வீடுகளும், விருதுநகர் மாவட்டத்தில் செவலூர் முகாமில் ரூ.3 கோடியே 11 லட்சம் செலவில் 62 வீடுகளும்,

அனுப்பன்குளம் முகாமில் ரூ.40 லட்சத்தில் 8 வீடுகளும், குல்லூர்சந்தை முகாமில் ரூ.3 கோடியே 51 லட்சத்தில் 70 வீடுகளும், கோவை மாவட்டம் கோட்டூர் முகாமில் ரூ.5 கோடியே 60 லட்சத்தில் 112 வீடுகளும், திருவண்ணாமலை மாவட்டம் புதிப்பாளையம் மற்றும் பையூர் முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ரூ.5 கோடியே 57 லட்சத்தில் 111 வீடுகளும், சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் முகாமில் ரூ.4 கோடியே 51 லட்சம் செலவில் 90 வீடுகளும்,

தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி முகாமில் ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் 52 வீடுகளும், தர்மபுரி மாவட்டம் சின்னாறு அணை முகாமில் ரூ.2 கோடியே 51 லட்சம் செலவில் 50 வீடுகளும், கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணை முகாமில் ரூ.1 கோடியே 86 லட்சத்தில் 37 வீடுகளும், நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் முகாமில் ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் 35 வீடுகளும், மதுரை மாவட்டம் திருவாதவூர் முகாமில் ரூ.1 கோடியே 51 லட்சத்தில் 30 வீடுகளும், திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை முகாமில் ரூ.1 கோடியே 51 லட்சம் செலவில் 30 வீடுகளும் என மொத்தம் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாரானது.

முதல்-அமைச்சருக்கு நன்றி

இந்த நிலையில் தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக வேலூர் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேல்மொணவூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்ட 220 வீடுகளை திறந்து வைத்தார்.

புதிய வீடுகளை வழங்கிடும் அடையாளமாக 5 குடும்பத்தினரிடம் வீட்டு சாவியை வழங்கினார். மேலும் 8 வகையான வீட்டு உபயோக பொருட்கள், மரக்கன்றுகள், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் ஆகியவற்றையும் வழங்கினார்.

மற்ற மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது அவர், இந்த முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களிடம் காணொலி மூலம் கலந்துரையாடினார்.

அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு, புதிய குடியிருப்பின் வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பதில் அளித்த இலங்கை தமிழர் ஒருவர், 'இந்த முகாமில் நாங்கள் நீண்ட காலமாக வசித்து வருகிறோம். தற்போது கட்டப்பட்டுள்ள வீடு நல்ல வசதியாக இருக்கிறது.

அங்கன்வாடி, நூலகம், பொது வினியோக அங்காடி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

புகைப்பட தொகுப்பு

மேல்மொணவூர் முகாமில் மற்ற மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளின் புகைப்பட தொகுப்பு வைக்கப்பட்டிருந்தது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், ஆர்.காந்தி, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், கலாநிதிவீராசாமி, கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமலுவிஜயன், தமிழரசி, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் ரத்தினசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, வேலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அமுதாஞானசேகரன், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் நந்தகுமார், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தாலாஸரஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story