இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1,591 புதிய வீடுகள்


இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1,591 புதிய வீடுகள்
x

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1,591 புதிய வீடுகளை வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.

வேலூர்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1,591 புதிய வீடுகளை வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்கு வீடுகள்

தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.11 கோடியில் 220 வீடுகள் உள்பட ரூ.176 கோடியில் 3,500 புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடந்தன.

இந்த நிலையில் வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் 19 முகாம்களில் ரூ.79 கோடியே 90 லட்சத்தில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் நடக்கிறது.

முதல்-அமைச்சர் ரெயிலில் வருகை

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகளை திறந்து வைக்கிறார்.

இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு இரவு 8.30 மணியளவில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து அவர் காரில் பயணம் செய்து வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.

நாளை காலை 9 மணியளவில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதன்பின்னர் அவர் மேல்மொணவூர் இலங்கை மறுவாழ்வு முகாமில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 1,591 புதிய வீடுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். பின்னர் முதல்-அமைச்சர் மேல்மொணவூர் முகாமை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை வழங்குகிறார்.

தொடர்ந்து அங்குள்ள ஒரு புதிய வீட்டை மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட உள்ளார். பின்னர் அவர் தனியார் நட்சத்திர ஓட்டலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார்.

தி.மு.க. முப்பெரும் விழா

மாலை 5 மணியளவில் பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரியில் நடைபெறும் தி.மு.க. பவளவிழாவுடன் கூடிய முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் உள்ள 4 மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சி பணியில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு பணமுடிப்பு மற்றும் நற்சான்றிதழும், பெரியார் விருது கி.சத்தியசீலனுக்கும், அண்ணாவிருது க.சுந்தரத்திற்கும், கலைஞர் விருது ஐ.பெரியசாமிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது மல்லிகா கதிரவனுக்கும், பேராசிரியர் அன்பழகன் விருது ந.ராமசாமிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேருரையாற்றுகிறார்.

விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின். எ.வ.வேலு, காந்தி மற்றும் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

விழாவிற்கு பின்னர் முதல்-அமைச்சர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணியளவில் ரெயில் மூலம் சென்னைக்கு செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்

முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.அருண் மேற்பார்வையில் வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் தலைமையில் வேலூர், காஞ்சீபுரம், விழுப்புரம் டி.ஜ.ஜி.க்கள், 12 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து காரில் செல்லும் தனியார் நட்சத்திர ஓட்டல், அண்ணாசாலை, மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் தி.மு.க. பவளவிழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெறும் கந்தனேரி வரை வழிநெடுகிலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐ.ஜி. ஆய்வு

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு போலீசார் காட்பாடி ரெயில் நிலையம் மற்றும் நிகழ்ச்சிகள், விழா நடைபெறும் இடங்கள் மற்றும் முதல்-அமைச்சர் செல்லும் வழியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதேபோன்று வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் விழா நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. விழா நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி.கண்ணன் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வேலூர் முதல் கந்தனேரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையோரம் முதல்-அமைச்சர் காரில் வரும் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு ஐ.ஜி. சில அறிவுரைகள் கூறினார்.

ஆய்வின்போது வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி.முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story