சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 16 பெட்டிகள் கழன்று தனியாக ஓடியதால் பரபரப்பு


சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 16 பெட்டிகள் கழன்று தனியாக ஓடியதால் பரபரப்பு
x

சென்னையில் இருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 16 பெட்டிகள் கழன்று தனியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருவள்ளூர்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு தினமும் இரவு 10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு செல்லும். மறுநாள் காலை 6 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை சென்றடையும்.

சென்டிரலில் புறப்படும் இந்த ரெயில் அடுத்ததாக அரக்கோணம் ரெயில்நிலையத்தில்தான் நிற்கும். இடையில் வேறு எந்த ரெயில் நிலையத்திலும் நிற்காது.

பயங்கர சத்தம்

இந்த நிலையில் வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்டிரல் ரெயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டது. மறுநாள் (நேற்று) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது.

என்ஜினுடன் சேர்த்து இந்த ரெயிலில் மொத்தம் 23 பெட்டிகள் இருந்தன. அந்த ரெயில் திருவள்ளூர் அருகே இரவு 10½ மணிக்கு வந்து கொண்டிருந்தது. இரவு நேரம் என்பதால் பயணிகள் சிலர் தூங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது ரெயிலில் உள்ள எஸ்-7 மற்றும் எஸ்-8 ஆகிய 2 பெட்டிகளுக்கு இடையே திடீரென பயங்கர சத்தம் ஏற்பட்டது இதனால் அந்த பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.

இணைப்பு கொக்கி உடைந்தது

அதற்குள் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்குள்ள 4-வது நடைமேடையில் ரெயில் சென்றபோது திடீரென்று அந்த 2 பெட்டிகளையும் இணைக்கும் இணைப்பு கொக்கி பலத்த சத்தத்துடன் உடைந்தது.

இதனை அறிந்த ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக உடனே ரெயிலை நிறுத்தினார்.

16 பெட்டிகள் கழன்று தனியாக ஓடின

ஆனால் அதற்குள் எஸ்-7 மற்றும் எஸ்-8 பெட்டிகளுடன் இணைக்கப்பட்டிருந்த 16 பெட்டிகளும் என்ஜினுடன் இணைக்கப்பட்ட பெட்டிகளில் இருந்து பிரிந்து தனியாக ஓடின. சிறிது நேரத்தில் அந்த 16 பெட்டிகளும் மெதுவாக 4-வது நடைமேடையில் வந்து நின்றன.

என்ஜினை விட்டு பிரிந்து ரெயில் பெட்டிகள் தனியாக செல்வதை பார்த்த பயணிகள் பயத்தில் அலறினர். ரெயில் நின்றதும் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி தங்களது உடைமைகளை எடுத்தபடி ரெயிலில் இருந்து கீழே இறங்கினர். இதனால் அந்த இடமே கலவரம் போல காட்சி அளித்தது.

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

வழக்கமாக அதிவேகமாக செல்லக்கூடிய அந்த ரெயில், திருவள்ளூர் ரெயில் நிலையத்தின் அருகே குறைவான வேகத்தில் சென்றதாலும், டிரைவரின் சாமர்த்தியத்தாலும் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதன் காரணமாக 16 பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ரெயில் வேகமாக சென்றிருந்தால் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று பயணிகள் தெரிவித்தனர்.

சீரமைப்பு பணி

இதற்கிடையே ரெயில்பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பெரம்பூர் லோகோ பணிமனையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

எஸ்.7 மற்றும் எஸ்.8 பெட்டிகளை இணைக்கும் கொக்கி உடைந்து போனதால் புதிதாக கொக்கி வரவழைக்கப்பட்டது.

3 மணி நேரம் தாமதம்

அதனை கொண்டு 2 பெட்டிகளையும் இணைத்ததும் சுமார் 3 மணி நேர தாமதத்திற்கு பின்னர், அதாவது நள்ளிரவு 1½ மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.ரெயில்பெட்டிகளை இணைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது பயணிகள் அனைவரும் திருவள்ளூர் ரெயில்நிலைய நடைமேடையிலேயே பயத்துடன் உட்கார்ந்திருந்தனர்.

சீரமைப்பு பணி முடிந்தபின்னர் அனைவரும் ரெயிலில் புறப்பட்டு சென்றனர். இதேபோல் அரக்கோணம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் ஏராளமான பயணிகள் ரெயிலுக்காக காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதிகாரிகள் விசாரணை

ரெயில் பெட்டியின் இணைப்பு கொக்கி துண்டானது ஏன்?, சென்டிரல் ரெயில்நிலையத்தில் இருந்து புறப்படும்போது ஊழியர்கள் அதனை சரிபார்த்தார்களா? என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.


Next Story