கோவை, ஈரோடு, சேலம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கோவை, ஈரோடு, சேலம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் சூரியன் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மதியவேளையில் பெரும்பாலானோர் வெளியே வருவதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே முடங்குகின்றனர்.
கோடை வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக சிலர் நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதேபோல உடலுக்கு குளிர்ச்சிதரும் பானங்களையும், பழச்சாறுகளையும் அதிகம் பருகுகின்றனர்.
கனமழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (திங்கட்கிழமை) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில்...
நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
8 மற்றும் 9-ந் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும், சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 செ.மீ. மழை
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி சேலம் தம்மம்பட்டி, கொடைக்கானலில் தலா 1 செ.மீ. மழை அதிபட்சமாக பதிவாகியுள்ளது.