சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 16 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்


சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 16 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்
x

சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 16 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

திருச்சி

டேங்கர் லாரி

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்டு ஆலையில் இருந்து டேங்கரில் 40 டன் சிமெண்டு ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு ஒரு டேங்கர் லாரி தூத்துக்குடி நோக்கி புறப்பட்டது. லாரியை தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சதீஷ் ஓட்டி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் திருச்சி பஞ்சப்பூர் பகுதிக்கு அந்த டேங்கர் லாரி வந்தது. பஞ்சப்பூர் போலீஸ் சோதனைச்சாவடி அருகே வந்த போது, சாலையின் குறுக்கே திடீரென ஒரு கார் வந்தது. கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் உடனடியாக பிரேக் போட்டுள்ளார்.

சாலையில் கவிழ்ந்தது

அப்போது, சாலையின் நடுவில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பில் டேங்கர் லாரி மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையின் நடுவில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் சதீஷ் படுகாயம் அடைந்தார்.அந்த வழியாக வந்தவர்களும், சோதனைச்சாவடியில் இருந்த போலீசாரும் லாரியின் கண்ணாடியை உடைத்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். டேங்கர் லாரியில் 40 டன் சிமெண்டு லோடு இருந்ததால் லாரியை உடனடியாக தூக்கி நிமிர்த்த முடியவில்லை.

மதியம் வரை நடந்த மீட்பு பணி

இதைத்தொடர்ந்து அரியலூரில் இருந்து மற்றொரு டேங்கர் லாரி கொண்டு வரப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான லாரியின் டேங்கரில் ஒரு பகுதியை கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டி துளையிட்டனர். இதைத்தொடர்ந்து, அதில் இருந்து பெரிய பையில் சிமெண்டை கொஞ்சம் கொஞ்சமாக கிரேன் உதவியுடன் அள்ளி மற்றொரு டேங்கர் லாரியில் நிரப்பப்பட்டன.

இந்த பணி நேற்று மதியம் 11 மணி வரை நடைபெற்றது. பின்னர், 2 கிரேன்கள் உதவியுடன் நேற்று மதியம் 12 மணி அளவில், அந்த டேங்கர் லாரி தூக்கி நிறுத்தப்பட்டது. மீட்பு பணிகள் நேற்று மதியம் 12 மணி வரை நடைபெற்றதால், சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பிரிவில் அதுவரை போக்குவரத்து தடைபட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

அணிவகுத்து நின்ற லாரிகள்

ஆனால், துவாக்குடியில் இருந்து தூத்துக்குடிக்கு காற்றாலை தூண்களின் பாகங்களை ஏற்றி வந்த 5 ராட்சத இழுவை லாரிகளால் சர்வீஸ் சாலையில் திரும்ப முடியவில்லை. இதனால் அவை சாலையோரத்திலேயே நேற்று மதியம் வரை அணிவகுத்து நின்றிருந்தன. அதில் வந்த டிரைவர்கள் லாரியிலேயே காலை உணவை சமைத்து சாப்பிட்டனர்.

கடந்த ஒரு வாரத்தில் ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரி, பார்சல் லாரி என்று 4 வாகனங்கள் சோதனைச்சாவடி தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்த விபத்துகள் இரவு நேரத்தில் ஒரே இடத்தில் நடந்துள்ளன. டிரைவர்கள் அதிவேகமாகவும், தூக்க கலக்கத்திலும் வாகனங்களை ஓட்டி வருவதே இந்த விபத்துக்களுக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கோரிக்கை

எனவே அந்த பகுதியில் இனி விபத்துகள் ஏற்படாமல் தடுக்க போலீசார் தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர். இந்த விபத்துகள் காரணமாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், சிக்னல் கம்பங்கள், சோலார் மூலம் ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட இரும்பு தடுப்புகள் அனைத்தும் உடைந்து சேதமடைந்துள்ளன.


Next Story