ஊட்டி படகு இல்லத்துக்கு 16¾ லட்சம் பேர் வருகை
கடந்த ஆண்டு ஊட்டி படகு இல்லத்துக்கு 16¾ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
ஊட்டி,
கடந்த ஆண்டு ஊட்டி படகு இல்லத்துக்கு 16¾ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
ஊட்டி படகு இல்லம்
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இதில் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். ஊட்டிக்கு வருபவர்கள் முதலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்காவிற்கு சென்று கண்டு ரசிக்கின்றனர்.
இதைதொடர்ந்து முக்கிய சுற்றுலா தலமாக ஊட்டி படகு இல்லம் உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகளுக்காக 33 மோட்டார் படகுகள், 17 துடுப்பு படகுகள், 105 மிதி படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படகு சவாரி செய்யலாம்.
16¾ லட்சம் பேர்
படகு சவாரியின் போது, சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த மரங்களையும், மான் பூங்காவில் உள்ள கடமான்களையும், ஏரி கரையோரம் மரங்களில் அமர்ந்திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் கண்டு ரசிக்கலாம். மேலும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக படகு இல்லத்தில் தனியார் மூலம் மினி ரெயில் மற்றும் பிற விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.
ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திலும், சிறுவர் பூங்கா உட்பட வசதிகள் உள்ளன. படகு சவாரி முடிந்து வெளியே வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி சென்று மகிழ்கிறார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஊட்டி படகு இல்லத்துக்கு 16 லட்சத்து 89 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர் என படகு இல்ல அதிகாரிகள் தெரிவித்தனர்.