குமரி மீனவர்கள் உள்பட 16 பேர் விடுதலை


குமரி மீனவர்கள் உள்பட 16 பேர் விடுதலை
x

டீகோ கார்சியா தீவில் சிறைபிடிக்கப்பட்ட குமரியை சேர்ந்த மீனவர்கள் உள்பட 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

டீகோ கார்சியா தீவில் சிறைபிடிக்கப்பட்ட குமரியை சேர்ந்த மீனவர்கள் உள்பட 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்தனர்.

16 மீனவர்கள்

குமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த ரெஜின் என்பவருக்கு 'செயின்ட்மேரீஸ்' என்ற விசைப்படகு உள்ளது. அந்த படகில் பிப்ரவரி மாதம் 9-ந்தேதி தூத்தூரை சேர்ந்த சரன்பாபு, டோர்பின், மார்த்தாண்டம் துறையை சேர்ந்த அனில்ராஜ், விஜின், ஜெரின், மிதுன்,திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞத்தை சேர்ந்த ஜான்சன், டேவிட்சன், வருண், அஸ்கர் அலி, முஸ்தபா, டேவிட்சன் பெர்லிங், புதிய துறையை சேர்ந்த சாஜி சில்வதாசன் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த ராஜூ, விஸ்வநாத், ரத்தியா ஆகிய 16 பேர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் கடந்த மாதம் 23-ந்தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பிரிட்டீஷ் இந்திய பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா தீவின் அதிகாரிகள் படகையும், அதில் இருந்த 16 மீனவர்களையும் சிறை பிடித்தனர். படகில் இருந்த மீன்களையும், மீன்பிடி உபகரணங்களையும் எடுத்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.23 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர் ரெஜின் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணியிடம் அபராதத்தை ரத்து செய்து, 16 மீனவர்களையும் விடுவிக்க ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

அபராதம்

அதைத்தொடர்ந்து ஜஸ்டின் ஆன்டணி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய-மாநில அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

அதைத்தொடர்ந்து அபராத தொகை ரூ.23 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக குறைக்கப்பட்டது.

அபராதத்தை செலுத்தியதை தொடர்ந்து படகும், அதில் இருந்த 16 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து 16 மீனவர்களும் விசைப்படகு மூலம் நேற்று முன்தினம் இரவு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள், படகின் உரிமையாளர் ரெஜின், சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி வரவேற்றனர்.


Next Story