இரு தரப்பினர் திடீர் மோதல் 16 பேர் கைது


இரு தரப்பினர் திடீர் மோதல் 16 பேர் கைது
x

வடலூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட திடீர் மோதலில் 3 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்

கடலூர்

வடலூர்

கொடிகம்பங்கள் சேதம்

வடலூர் அருகே ரோட்டுமருவாய் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை மளிகை கடையில் இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அன்று இரவு மர்மநபர்கள் இரு கட்சிகளின் கொடிகம்பத்தை சேதப்படுத்தியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் வடலூர்- கும்பகோணம் சாலையில் மருவாய் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காரை வழிமறித்தனர்

அப்போது குறிஞ்சிப்பாடியில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் காரையும் அவர்கள் வழிமறித்து முறையிட்டுள்ளனர். அப்போது காரில் இருந்து கீழே இறங்கி பார்த்துவிட்டுதான் செல்ல வேண்டும் எனகூறினர். இதையடுத்து அமைச்சர் பன்னீர்செல்வம் காரில் இருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

திடீர் மோதல்

அப்போது திடீரென இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அமைச்சர் பன்னீர்செல்வத்தை பாதுகாப்பாக காருக்குள் அழைத்து சென்று அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த கல்வீச்சில் அந்த வழியாக சென்ற ஒரு தனியார் மற்றும் 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

16 பேர் கைது

பின்னர் இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் வடலூா் போலீஸ் நிலையத்தில் புகாா் கொடுத்தனர். இதில் நைனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சோழன்(35) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ரோட்டுமருவாய் கிராமத்தை சேர்ந்த சிவசக்தி(44), சந்தோஷ் குமார்(39), மகேந்திரன்(35), தயாநிதி(33), ரவிக்குமார்(27),வேல்முருகன்(48), மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 8 பேரையும், ரோட்டு மருவாய் கிராமத்தை சேர்ந்த சிவசக்தி(44) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சோழன்(45), செல்வராஜ்(26), சூரியமூர்த்தி(28), மணிகண்ட மூர்த்தி(26), வன்னிய ராஜன்(34), குப்புசாமி(54), ராஜேந்திரன்(62), கலியபெருமாள்(66) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story