16 ரேஷன் கடைகளை பிரித்து பொருட்கள் வழங்க வேண்டும்; கலெக்டரிடம் தி.மு.க. கோாிக்கை மனு


16 ரேஷன் கடைகளை பிரித்து பொருட்கள் வழங்க வேண்டும்; கலெக்டரிடம் தி.மு.க. கோாிக்கை மனு
x
தினத்தந்தி 26 Oct 2022 6:45 PM GMT (Updated: 26 Oct 2022 6:46 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் 16 ரேஷன் கடைகளை பிரித்து பொருட்கள் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் தி.மு.க.வினர் கோாிக்கை மனு கொடுத்தனர்.

தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஊர்களில் 16 ரேஷன் கடைகளை பகுதி நேர மற்றும் முழுநேர கடைகளாக பிரித்து வழங்க வேண்டும். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று பொருட்கள் வாங்குவதை தவிர்த்து அவர்கள் இருக்கும் பகுதியிலேயே வாங்குவதற்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் வீராணம் கருவந்தா, கருத்தலிங்கபுரம், வேதம் புதூர், மருதபுரம் புதூர் (தெற்கு காவலாகுறிச்சி), பாப்பான்குளம், வாகைகுளம், ராஜாங்கபுரம், பிள்ளைகுளம், துரைசாமிபுரம், முப்புலியூர், இந்திரா நகர், தென்காசி புதுமனை தெரு, சபரி நகர், மணல் காட்டானூர் ஆகிய இடங்களில் பகுதிநேர கடைகளாகவும், கல்லூத்தில் முழு நேர கடையாகவும் பிரித்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பழனி நாடார் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், தென்காசி தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story