கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட 16 ஆயிரத்து 496 பட்டாக்கள்: முதல்-அமைச்சர் வழங்கினார்


கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட 16 ஆயிரத்து 496 பட்டாக்கள்: முதல்-அமைச்சர் வழங்கினார்
x

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருமுறை வரைமுறை திட்டத்தின்படி கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட 16 ஆயிரத்து 496 பட்டாக்களை உரியவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

நீர்வழிப் புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல், மந்தைவெளி, மயானம் மற்றும் பாட்டை என அரசு நிலங்கள் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கான உபயோகத்தில் அவை இல்லாமல் நத்தமாக இருந்து, அதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு அந்நிலங்கள் அரசின் உபயோகத்திற்கு தேவை இல்லை என்ற நிலையில் இருந்தால் அவற்றை அவர்களுக்கே வழங்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

அதற்காக மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழு, அந்த நிலங்களை தணிக்கை செய்து உள்ளாட்சி மன்றங்களில் தீர்மானங்களை பெற்று, தகுதியின் அடிப்படையில் குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தும். சென்னை புறநகர்ப் பகுதி, நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்குள் வீட்டுமனை ஒப்படை செய்ய விதிக்கப்பட்ட தடையாணையும், ஒருமுறை மட்டுமே வரன்முறை செய்து வீட்டுமனை ஒப்படை வழங்கும் திட்டத்திற்கு முன்னர் தளர்வு செய்யப்பட்டது.

மாறுதல் செய்யப்பட்டன

இதன் அடிப்படையில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. 2000 - 2011 காலகட்டங்களில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள், கிராமக் கணக்குகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நத்தம் அடங்கலில் ஏற்றப்படவில்லை. எனவே, பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ், வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதில், கிராமக் கணக்குகளில் உரிய மாறுதல் மேற்கொள்ளப்படாமல் இருந்த பட்டாக்கள் சரி செய்யப்பட வேண்டும் என்று சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

இதுபோன்ற பட்டா பிரச்சினையால் அதிகாரப்பூர்வமான பரிவர்த்தனை மற்றும் வங்கி கடன் பெற இயலவில்லை என்று திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இக்கோரிக்கைகள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன. மக்கள்கேட்டுக் கொண்டபடி, முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 8,136 பட்டாக்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3,949 பட்டாக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4,411 பட்டாக்களும், என மொத்தம் 16 ஆயிரத்து 496 பட்டாக்கள் கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்டு இருந்தன.

மு.க.ஸ்டாலின் வழங்கினார்

இந்த நிலையில், கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று மறைமலைநகரில் நடைபெற்றது. அப்போது, 16 ஆயிரத்து 496 பட்டாக்கள் கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்டு, அதற்கான பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 15 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், காந்தி, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சீபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,256 பட்டாக்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 9 பட்டாக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 197 பட்டாக்களும் என மொத்தம் 3,462 பட்டாக்கள் கிராமக் கணக்குகளில் மாறுதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளும் விரைவில் நிறைவு பெறும்.


Next Story