மதுரவாயலில் 16 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்


மதுரவாயலில் 16 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்
x

மதுரவாயலில் தெருவில் நிறுத்தி இருந்த 16 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது.

சென்னை

சென்னை மதுரவாயல், வி.ஜி.பி. அமுதம் நகர் பகுதியில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக அந்த இடத்தின் உரிமையாளர், சிமெண்ட் மற்றும் இரும்பு பொருட்களை வைப்பதற்கு ஓலை குடிசை அமைத்து அதில் தற்காலிக மின் இணைப்பு பெற்று மீட்டர் பொருத்தி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த குடிசையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ, மளமளவென அங்கு தெருவில் வரிசையாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களுக்கு பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள், மதுரவாயல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள், இருசக்கர வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் அங்கு நிறுத்தி இருந்த சுமார் 16 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது இருசக்கர வாகனங்களை வீட்டின் அருகே நிறுத்த இடம் இல்லாததால் மொத்தமாக இங்கு ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story