சேலம் மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வை 16,834 பேர் எழுதினர்


சேலம் மாவட்டத்தில் 22 மையங்களில் நடந்த போலீஸ் எழுத்து தேர்வை 16 ஆயிரத்து 834 பேர் கலந்து கொண்டு எழுதினர்.

சேலம்

எழுத்து தேர்வு

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்கள், சிறை காவலர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சேலம் 4 ரோடுசிறுமலர் மேல்நிலைப்பள்ளி, சோனா கல்லூரி, ஜெய்ராம் கல்லூரி, ஏ.வி.எஸ் கல்லூரி, பெரியசீரகாபாடி கிருபானந்த வாரியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 22 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த தேர்வை எழுதுவதற்காக 20 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். எழுத்து தேர்வில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே விண்ணப்பதாரர்களுக்கு அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்வுக்கான ஏற்பாடுகளை போலீஸ் உயர் அதிகாரிகள் செய்திருந்தனர்.

16,834 பேர் பங்கேற்பு

நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான தேர்வர்கள் காலை 8 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பின்னர் தேர்வர்கள் வரிசையாக நிற்க வைத்து கடும் சோதனைக்கு பின்னர் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன், கைக்கெடிகாரம், கால்குலேட்டர், நோட்டு, புத்தகம் உள்ளிட்டவை எடுத்து செல்ல தடை விதிக்கப்படடு இருந்தது.

. சரியாக காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12.40 மணிக்கு முடிவடைந்தது. சேலம் மாவட்டத்தில் 22 மையங்களில் நடந்த எழுத்து தேர்வை 16 ஆயிரத்து 834 பேர் மட்டும் கலந்து கொண்டு எழுதினர். 4 ஆயிரத்து 128 பேர் தேர்வு எழுத வரவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் ஆய்வு

சேலம் மாநகரில் நடந்த போலீஸ் எழுத்து தேர்வு மையங்களில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முறைகேடு எதுவும் நடைபெறாமல் அனைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தேர்வு மையங்களில் இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Next Story