17 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவையில் 17 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. அவர்களுக்கு 27 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவை
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவையில் 17 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. அவர்களுக்கு 27 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
இலவச திருமணம்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 217 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கோவையிலும் திருமணம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் 17 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் தலைமை தாங்கினார். திருமண விழாவில் மணமக்களான 17 ஜோடிகளும் மாநகராட்சி கலையரங்க மேடையில் மாலை அணிந்து அமர வைக்கப்பட்டனர்.
வாழ்த்து
தொடர்ந்து வேதமந்திரங்கள் ஓதப்பட்டு மணமகன்கள், மணமகள்களின் கழுத்தில் தாலியை கட்டினர். அப்போது விழாவில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்பட அனைவரும் அட்சதை தூவி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, மருதமலை முருகன் கோவில் துணை ஆணையரும், செயல் அலுவலருமான ஹர்ஷினி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
27 வகை சீர்வரிசை
திருமணம் முடிந்ததும் மணமகன்கள், மணமகள்களின் கால்களில் மெட்டி அணிவித்தனர். பின்னர் 17 புதுமண தம்பதிகளுக்கும் கட்டில், மெத்தை, தலையணை, மிக்சி, கிரைண்டர், குத்துவிளக்கு மற்றும் வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள் உள்பட 27 வகையான சீர்வரிசை பொருட்கள் தாய் வீட்டு சீதனமாக வழங்கப்பட்டது. இது தவிர திருமண விழாவில் பங்கேற்ற அனைவருக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், வடை வழங்கப்பட்டது.