ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களும் சிக்கின.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களும் சிக்கின.
பெண் பயணிகள்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சார்ஜா, துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது.
விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை சோதனை நடத்திய போது, 57 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கம், 30 கிராம் சங்கிலி வடிவிலான தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 911 ஆகும்.
இதே விமானத்தில் வந்த மற்றொரு பெண் பயணியை சோதனை செய்தபோது 135 கிராம் மதிப்புள்ள தங்க கட்டி மற்றும் 30 கிராம் மதிப்புள்ள தங்க சங்கிலியை கடத்தி வந்தார். இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 7 ஆயிரத்து 895 ஆகும்.
செல்போன்கள்
இதேபோல் நேற்று காலை துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த வாலிபரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் கொண்டு வந்த ஜீன்ஸ் பேண்ட்டில் பட்டன் டிஸைனில் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 652 மதிப்புள்ள 44 கிராம் தங்கமும், ரூ.2½ லட்சம் மதிப்பிலான 2 ஐபோன்களும் கடத்தி வந்தார். மற்றொரு பயணியை சோதனை செய்தபோது, ஜீன்ஸ் பேண்ட் பட்டனில் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 984 மதிப்பிலான 48 கிராம் தங்கத்தையும், முகத்தில் அணியும் மாஸ்க்கில் பட்டை வடிவில் ரூ.58 ஆயிரத்து 663 மதிப்பிலான 11 கிராம் தங்கத்தையும், ரூ.2½ லட்சம் மதிப்பிலான 2 ஐபோன்களையும் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணை
இதனையடுத்து அதிகாரிகள் கடத்தல்காரர்களிடம் இருந்து தங்கத்தையும், செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் 2 பெண் பயணிகள், 2 ஆண் பயணிகளிடம் இருந்து சுமார் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கமும், 4 ஐபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.