கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் ரிசர்வ் வங்கி போலி முத்திரையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட 17 பேர் கைது; ரூ.11 லட்சம், 3 கார்கள் பறிமுதல்


கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் ரிசர்வ் வங்கி போலி முத்திரையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட 17 பேர் கைது; ரூ.11 லட்சம், 3 கார்கள் பறிமுதல்
x

கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் ரிசர்வ் வங்கி போலி முத்திரையை பயன்படுத்தி பண மோசடி செய்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் ரிசர்வ் வங்கி போலி முத்திரையை பயன்படுத்தி பண மோசடி செய்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இளம்பெண்கள் அடங்கிய கும்பல்

குறுகிய காலத்தில் பணக்காரர் ஆவது எப்படி? இது தான் நவீன காலத்து மக்களின் தேடுதலாக இருந்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் புதிது புதிதாக மோசடிகளை அறங்கேற்றி மக்களிடம் இருந்து லட்ச லட்சமாக பணத்தை அபகரிப்பது வாடிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறுபவர்கள் இருக்கதான் செய்கிறார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரியில் இதுபோன்ற மோசடி சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 36). இவரது தலைமையில் 2 இளம்பெண்கள் உள்பட 17 பேர் கொண்ட கும்பல் கன்னியாகுமரி வடக்கு குண்டலில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த சில நாட்களாக தங்கி இருந்தனர். அப்போது வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் அந்த லாட்ஜிக்கு வருவதும், செல்வதுமாக இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

5 மடங்கு பணம்

அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட 17 பேரும் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இந்த கும்பல் ஒரு ரூபாய் கொடுத்தால் 3 மாதங்களில் அதை 5 மடங்காக கொடுப்பதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர். அதாவது ரூ.1 கொடுத்தால் 3 மாதத்தில் அதை 5 ரூபாயாக கொடுப்பதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வந்துள்ளனர்.

இந்த விளம்பரத்தை பார்த்து ஆசைப்பட்டு தொடர்பு கொள்ளும் நபா்களிடம் இளம்பெண்களை வைத்து பேச வைத்து உள்ளனர். இளம்பெண்களின் வசிகரமான பேச்சில் பலரும் வீழ்ந்து முதலீடு செய்ய கன்னியாகுமரிக்கு ஓடி வந்துள்ளனர். கன்னியாகுமரி வந்த ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் லாட்ஜில் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சினிமா பாணியில் மூளை சலவை

அங்கு அவர்களுக்கு என்ன தேவையோ அதை இளம்பெண்கள் மூலமே செய்து கொடுத்து மூளை சலவை செய்துள்ளனர். சூரியவம்சம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் பஸ்சில் பயணம் செய்யும் ஒருவர் புளியம்பட்டிக்கு டிக்கெட் கேட்பார். ஆனால் அப்போது பஸ்சில் இருந்த பெண் கண்டக்டரை பார்த்ததும் தனது முடிவை மாற்றிக் கொண்டு பொள்ளாச்சிக்கு டிக்கெட் எடுப்பார். அதேபோல் ஆயிரம் ரூபாய் அல்லது ரூ.5 ஆயிரம் மட்டும் முதலீடு செய்து பார்ப்போம் என்று வந்த வாடிக்கையாளர்கள் கூட இளம்பெண்களை பார்த்ததும் அவர்களின் அழகிலும், இனிமையான பேச்சிலும் மயங்கி அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். அந்த வகையில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்ய விரும்பியவர்கள் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்து இருக்கிறார்கள்.

போலி முத்திரை

இவ்வாறு அந்த கும்பல் வாடிக்கையாளர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியின் போலி முத்திரையை காண்பித்தும், அவர்களுக்கு கொடுத்த ஆவணங்களில் போலி முத்திரையை பதித்தும் ஏமாற்றியுள்ளனர்.

மேற்கண்ட விவரங்கள் போலீஸ் விசாரணையில் ெதரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து மோசடி கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த சுந்தரபாண்டியன், தேனியை சேர்ந்த அஜித்குமார் (33), காரைக்குடியை சேர்ந்த துரைசிங்கம் (55), கோவையை சேர்ந்த வேணுகோபால் (50), ராஜன் (57), மதுரையை சேர்ந்த சுதாகர் (27), முகேஷ் (19), பெருமாள் (33), ராஜாமணி (40), சிவகாசியை சேர்ந்த பாலமுருகன் (24), கும்மிடிபூண்டியை சேர்ந்த பாலையா (24), ஆனந்தகுமார் (25), சென்னையை சேர்ந்த பிரசாந்த் (24), தாமரைகுளத்தை சேர்ந்த சங்கரநாராயணன் (60), மராட்டியத்தை சேர்ந்த சூரஜ் (27), புனேயை சேர்ந்த கீதா (30) மற்றும் பூஜா (28) ஆகிய 17 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல்

அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம், 3 கார்கள், மோசடிக்காக பயன்படுத்திய விண்ணப்பங்கள், ஆதார் அட்டைகள், ஸ்கேனர், பிரிண்டர், 3 லேப்டாப்கள், 32 செல்போன்கள், கம்ப்யூட்டர் மற்றும் இ-சைன் போர்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னதாக மோசடி கும்பல் கைது நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கீதா, நிதிபால்ராஜ், தனிப்படை போலீஸ் முத்துராஜ் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டினார்.


Next Story