சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 17 பேர் காயம்


சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 17 பேர் காயம்
x

காரையூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 17 பேர் காயமடைந்தனர். மேலும் வீரர்கள் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே கீழத்தானியத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி மாவயல் காட்டு அய்யனார் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

17 பேர் காயம்

இதில் 155 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.

இதில் திருச்சி திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 539 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர், பார்வையாளர்கள் 2 பேர், காளையின் உரிமையாளர்கள் 9 பேர் உள்பட 17 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரிசு பொருட்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினர்களால் கட்டில், டி.வி., சைக்கிள், மிக்சி, டைனிங் டேபிள், குக்கர், சில்வர் பாத்திரங்கள், ரொக்கப் பரிசு உள்பட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் 15 காளைகளை பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக மதுரை மாவட்டம், மேட்டுப்பட்டி கார்த்திக் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த காளைக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

மழை

ஜல்லிக்கட்டு ஆரம்பமான முதலே காலையிலிருந்து ஜல்லிக்கட்டு முடியும் வரை மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், தனி தாசில்தார் பழனிச்சாமி மற்றும் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், காரையூர், பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கீழத்தானியம் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story