இந்து முன்னணியினர் 170 பேர் கைது


இந்து முன்னணியினர் 170 பேர் கைது
x

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த 170 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த 170 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியின் துணை அமைப்பான இந்து கலை இலக்கிய முன்னணியின் மாநில பொறுப்பாளர் கனல் கண்ணன் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கனல் கண்ணனை நேற்று முன்தினம் கைது செய்தனர். கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கோவையில் காந்திபார்க் ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் நேற்று காலையில் கோவை மாநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான இந்து முன்னணியினர் காந்திபார்க் ரவுண்டானா அருகில் திரண்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர்.

கைது

போலீசார், இந்து முன்னணி நிர்வாகிகளிடம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. எனவே களைந்து செல்லும்படி கூறினர். ஆனால் மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செயலாளர் ஆறுச்சாமி, நிர்வாகிகள் சதீஷ், கிருஷ்ணன், ஜெய்சங்கர், மகேஷ்வரன், சோமசுந்தரம், செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. மேலும் இந்து முன்னணியினர் தரையில் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.

துடியலூர், காரமடை

இதேபோல கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகர நிர்வாகிகள் சதீஷ், மாசிலாமணி, சீனிவாசன் மற்றும் மனோகரன் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் காரமடை கார் நிறுத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவப்புகழ், கோட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் உள்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல கருமத்தம்பட்டி நால் ரோட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்கள் 60 பேரை கருமத்தம்பட்டி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


Next Story