சேலம் மாவட்டத்தில் 1,766 விநாயகர் சிலைகள் கரைப்பு


சேலம் மாவட்டத்தில் 1,766 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

சேலம்

சேலம்,

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் அனுமதியுடன் 865 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இதில் மாநகரில் இந்து முன்னணி சார்பில் எல்லைப்பிடாரியம்மன் கோவில் அருகில் மற்றும் பல்வேறு இடங்களில் 60-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

இந்தநிலையில் விநாயகர் சிலைகள் 3 நாட்கள் சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு நேற்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஏரி உள்பட நீர்நீலைகளில் விசர்ஜன செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி சேலம் செரி ரோட்டில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில் அருகில் இந்து முன்னணி சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் டெம்போ வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.

பலத்த பாதுகாப்பு

இதையடுத்து இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, தேசிய சிந்தனை கழகத்தின் தமிழ்நாடு அமைப்பாளர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் அண்ணாதுரை, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது பெண்கள் விளக்கேற்றி சென்றனர்.

மேளதாளங்கள் முழக்கத்துடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செரி ரோடு, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக கன்னங்குறிச்சி மூக்கனேரிக்கு சென்றது. அங்கு சிறப்பு பூஜைக்கு பின் மூக்கனேரியில் விநாயகர் சிலைகள் பாதுகாப்பாக கரைக்கப்பட்டன. பெரிய விநாயகர் சிலைகள் பரிசலில் எடுத்து சென்று விசர்ஜனம் செய்யப்பட்டன. இதையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

816 விநாயகர் சிலைகள்

பாதுகாப்பு மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மூக்கனேரியில் தீயணைப்பு வாகனம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுதவிர மூக்கனேரியில் நகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தனியாக வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை மேளதாளத்துடன் வாகனங்களில் எடுத்து சென்று கரைத்தனர்.

இதேபோல், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அம்மாபேட்டை குமரகிரி ஏரிக்கும் விநாயகர் சிலைகள் கொண்டு சென்று கரைக்கப்பட்டன. மாநகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 816 விநாயகர் சிலைகள் ஏரிகளுக்கு எடுத்து சென்று கரைக்கப்பட்டன. மேலும் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டவர்களும் நேற்று காலை முதலே ஏரிகளுக்கு கொண்டு சென்று கரைத்தனர்.

புறநகரில்...

இதே போல புறநகரில் போலீஸ் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் 1,045 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்த நிலையில் மேச்சேரி, ஓமலூர், வெள்ளாறு, கூணான்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூணான்டியூர் காவிரி ஆற்றங்கரையோரத்திலும், திப்பம்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி, தாரமங்கலம், குஞ்சாண்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திப்பம்பட்டி காவிரி ஆற்றங்கரையோரத்திலும் விநாயகர் சிலைகளை கரைத்தனர். நேற்று மட்டும் 950 விநாயர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் மொத்தம் 1,766 விநாயகர் சிலைகள் ஏரிகள் மற்றும் ஆற்றங்கரைகளுக்கு எடுத்து சென்று கரைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story