வானமாதேவியில் 18 செ.மீ. மழை பெய்தது


வானமாதேவியில் 18 செ.மீ. மழை பெய்தது
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வானமாதேவியில் 18 செ. மீ. மழை கொட்டியது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டனர்

கடலூர்

கடலூர்

கோடை மழை

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வந்தது. அதிகபட்சமாக 101 டிகிரி வெயில் தாக்கியது. இதற்கிடையே சிலநாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.

இந்நிலையில் தென் இந்திய பகுதிகளின் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது.

விடிய, விடிய மழை

தொடர்ந்து இரவு கன மழை கொட்டியது. அதிகாலை 2.30 மணிக்கு மிக கன மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை விடிய, விடிய நேற்று காலை 8.30 மணி வரை விட்டு, விட்டு வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் பெருக் கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான இடங்களில் தேங்கி நின்றது. குறிப்பாக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. போலீஸ் குடியிருப்பு பகுதி, பழைய போலீஸ் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்து நின்றது.

மழையால் கடலூர் நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் இருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில், அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மின்ஊழியர்கள் விரைந்து வந்து, சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைத்து மின்வினியோகம் செய்தனர்.

தண்ணீர் தேங்கியது

இதேபோல் வானமாதேவி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், லக்கூர், பெலாந்துறை, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, அண்ணாமலைநகர், புவனகிரி, பரங்கிப்பேட்டை, வேப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சேத்தியாத்தோப்பு, பூதங்குடி ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்து நின்றது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களையும் மழைநீர் மூழ்கடித்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

மழைஅளவு

இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பண்ருட்டி அருகே உள்ள வானமாதேவியில் 18 செ.மீ. (187 மில்லி மீட்டர்) பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

கடலூர் -109.4

கலெக்டர் அலுவலகம் - 104.1

பண்ருட்டி - 90

வடக்குத்து- 88

குப்பநத்தம் - 87.6

வேப்பூர் - 80

குடிதாங்கி - 79.5

விருத்தாசலம்- 69

ஸ்ரீமுஷ்ணம் - 68.3

காட்டுமயிலூர் - 60

சேத்தியாத்தோப்பு - 52.4

கீழசெருவாய் - 49

லக்கூர் - 48

பெலாந்துறை- 40

லால்பேட்டை - 34

மே.மாத்தூர்- 30

காட்டுமன்னார்கோவில்- 23

தொழுதூர் - 21

குறிஞ்சிப்பாடி- 18

அண்ணாமலைநகர்- 9

கொத்தவாச்சேரி- 8

பரங்கிப்பேட்டை- 5.4

புவனகிரி- 2

சிதம்பரம் - 1


Related Tags :
Next Story