அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது


அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது
x

வேலூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

அடிப்படை வசதிகள்

வேலூர் மாநகராட்சி 32-வது வார்டு கொணவட்டம் விரிவு பகுதியான இந்திராநகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். வாரம் 2 முறை குடிநீர் வினியோகிக்க வேண்டும். பகுதிநேர ரேஷன்கடை அமைக்க வேண்டும்.

மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அங்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

அதனால் இந்திராநகரில் அடிப்படை செய்து தரக்கோரி மனிதசங்கிலி போராட்டம் மேல்மொணவூரில் நேற்று நடத்த போவதாக அப்பகுதி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

ஆனால் அதனையும் மீறி இந்திராநகர் பொதுமக்கள் மேல்மொணவூரில் சென்னை-பெங்களுரு அணுகுசாலையோரம் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவதற்காக திரண்டனர். விரிஞ்சிபுரம் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினார்கள்.

ஆனால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி கீழ்மொணவூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதற்கிடையே மாநகராட்சி அலுவலர்கள் திருமண மண்டபத்துக்கு சென்று இந்திராநகரில் விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து சிறிதுநேரத்தில் போலீசார் அவர்களை விடுவிடுத்தனர்.


Next Story