அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 18 பேர் அனுமதி தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரிக்கை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு பாதிப்புடன் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு பாதிப்புடன் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சல்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அவற்றை தடுக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில், மதுரை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தற்போது மதுரையில் பெய்து வரும் மழையினால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கும் மழை நீரினால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, தினசரி 10 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 18 பேர் டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் 3 பேர் குழந்தைகள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களும் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இது தவிர தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சையில் இருக்கின்றனர். மதுரையில் அதிகரித்து வரும் பாதிப்பால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
தினமும் 70 பேர்
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
மதுரையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. இதனால், தினமும் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு நடத்தப்படும் பரிசோதனையில் டெங்கு பாதிப்பு இருக்கும்பட்சத்தில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் பரவலாக காய்ச்சல் அதிகரித்து காணப்படுவதால், மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
இதுபோல், காய்ச்சலுடன் சேர்ந்து மஞ்சள்காமாலையும் பரவி வருகிறது. இதனால் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். வெளிஇடங்களில் வைத்துள்ள தண்ணீரை பருகாமல் இருக்க வேண்டும் என்றனர்.
மதுரை மாவட்டத்தில் தினமும் டெங்கு பாதிப்பு அதிகமாகி வருவதால் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.