வரி, வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் 18 சதவீதம் அபராதம்
திருக்கோவிலூர் நகராட்சியில் வரி, வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் 18 சதவீதம் அபராதம் ஆணையாளர் எச்சரிக்கை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன் குமார் திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் கீதாவை தொடர்பு கொண்டு நகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார். இதுகுறித்து நகராட்சி ஆணையர் கீதா கூறும்போது, திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை பகுதி பகுதியாக அகற்ற உள்ளோம். முதல் கட்டமாக வருற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கும். எனவே ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை, வரி பாக்கியை உரிய தேதிக்குள் செலுத்தாவிட்டால் 18 சதவீத அபராதத்துடன் கட்ட வேண்டி இருக்கும். எனவே அபராதத்தை தவிர்க்கும் வகையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை, வரி பாக்கியை உடனடியாக கட்டி ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.