மாவட்டத்தில் 1,800 போலீசார் பாதுகாப்பு


மாவட்டத்தில் 1,800 போலீசார் பாதுகாப்பு
x

மாவட்டத்தில் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி

சுதந்திர தின விழா

நாட்டின் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி விமானநிலையம், ரெயில்வே ஜங்ஷன், 6 ரெயில் நிலையங்கள், 2 பஸ் நிலையங்கள், 10 முக்கிய கோவில்கள், தேவாலயங்கள், தலைவர்களின் சிலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்கவும், 17 முக்கிய இடங்கள், 9 சோதனை சாவடிகள் ஆகிய இடங்களில் வாகன சோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் 3 அணிகளாக பிரிக்கப்பட்டு மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு உபகரணங்களுடன் முக்கிய இடங்களை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் வெளியாட்கள் சந்தேகப்படும்படியாக தங்கி உள்ளார்களா? என்று சோதனை மேற்கொள்ளவும், சுதந்திர தினத்தன்று சில்லறை மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என்றும் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

சுதந்திரதினவிழா நடைபெறும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில், போலீஸ் துணை கமிஷனர்கள், மாநகர ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனர், 6 போலீஸ் உதவி கமிஷனர்கள், 40 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என திருச்சி மாநகரத்தில் 867 போலீசார் நேற்று பகல் முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார். இதேபோல் திருச்சி மாவட்டத்திலும் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மோப்ப நாயை கொண்டு சோதனை நடத்தப்பட்டது.


Next Story