குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 182 மனுக்கள் பெறப்பட்டன
தென்காசியில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 182 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் துறை அலுவலர்கள் பதில் அளிக்குமாறு கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
தென்காசியில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 182 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் துறை அலுவலர்கள் பதில் அளிக்குமாறு கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஊமைத்துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், அனைத்து துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 182 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.
நீர் இருப்பு விவரம்
தென்காசி மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் 3,953 எக்டேர், சிறுதானியங்கள் 3,213 எக்டேர், பயறு வகைகள் 349 எக்டேர், பருத்தி 1,099 எக்டேர், கரும்பு 1,152 எக்டேர், எண்ணெய்வித்து 1,236 எக்டேர், தென்னை 12,055 எக்டேர் ஒத்திசைவு செய்யப்பட்டது. மேலும் மழை அளவு, நீர் இருப்பு விவரம் இடுபொருட்கள் விவரம் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் வாசுதேவநல்லூர் வட்டாரத்தை சேர்ந்த 2 விவசாயிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் மதிப்பில் மின் கல தெளிப்பான் மற்றும் தார்ப்பாலினை முழு மானியத்தில் கலெக்டர் வழங்கினார்.
நலத்திட்ட உதவி
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.2,500 மானியத்தில் நேரடி நெல் விதைப்பு கருவி வழங்கப்பட்டது. தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு சின்ன வெங்காயம் பரப்பு விரிவாக்கத்திற்காக ரூ.8 ஆயிரம் மதிப்பிலான விதைகள் மற்றும் இடுபொருட்களும், 2 பேருக்கு வாழை சாகுபடி பரப்பு விரிவாக்கத்திற்காக ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான வாழைத்தார் உறைகளும் மானிய விலையில் வழங்கப்பட்டது.
வாசுதேவநல்லூர் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையினர், கடையநல்லூர், செங்கோட்டை வட்டார தோட்டக்கலை துறையினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.