மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.1.85 கோடியில் நலத்திட்ட உதவிகள்


மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.1.85 கோடியில் நலத்திட்ட உதவிகள்
x

மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.1.85 கோடியில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் அருகே நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.1.85 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

மக்கள் நேர்காணல் முகாம்

பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குப்பத்தேவன் ஊராட்சி கணேசபுரத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் கலால் உதவி ஆணையரும், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருமான (பொறுப்பு) கோ.பழனிவேல் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்திரா, அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 56 பயனாளிகளுக்கு, மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரம் வழங்குவதற்கான ஆணை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 380 பயனாளிகளுக்கு ரூ.36 லட்சத்து 56 ஆயிரத்து 125 மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப்பட்டா, 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை என மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சத்து 15 ஆயிரத்து 583 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

ஆய்வு

தொடர்ந்து சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோராவில் கலெக்டர் கடலோர கிராமங்களை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஆழிவனம் எனப்படும், அலையாத்திக்காடுகள் ஏற்படுத்தும் வகையில் 2,000 சுரபுன்னை செடிகளை நட்டு வைத்தார்.

பின்னர் மனோராவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு அலுவலர் பயிற்சி மைய கட்டிடம் கட்டுமானப்பணி, படகு குழாம், உணவகம், சிறுவர் பூங்கா ஆகிய இடங்களை ஆய்வு செய்தார். கழனிவாசல் ஊராட்சி கொரட்டூர் கிராமத்தில் பசுமையை பராமரிக்கும் வகையில், "ஊருக்கு ஒரு வனம்" என்ற திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கர் பரப்பளவில் 100 தென்னை மரங்கள், மா, பலா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட ஆயிரம் பழக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இதில் தனித்துணை கலெக்டர் தவவளவன், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் (ஊராட்சி) சங்கர், தாசில்தார் சுகுமார், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் முத்துமாணிக்கம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சுவாதி காமராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் சுதாகர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story