தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,881 வழக்குகளுக்கு தீர்வு
கரூர் மாவட்டத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,881 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களில் நேற்று 4-வது தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மொத்தம் 3,239 வழக்குகள்எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதில், 1,881 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவ்வழக்குகள் மூலம் மொத்தம் ரூ.18 கோடியே 50 லட்சத்து 56 ஆயிரத்து 524-க்கு தீர்வு காணப்பட்டது.இதில் தாந்தோணிமலையில் உள்ள கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும், சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவருமான சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
குளித்தலை
குளித்தலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முககனி தலைமையில் நடந்த இந்த மக்கள் நீதிமன்றத்தில் சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 784 வழக்குகளுக்கு ரூ. 4 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரத்து 154-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார், கிருஷ்ணராயபுரம் நீதித்துறை நடுவர் அசோக்பிரசாத், குளித்தலை வக்கீல் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.