பழனியில் 18-ந்தேதி போகர் ஜெயந்தி விழா
பழனியில் போகர் ஜெயந்தி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
பழனி முருகன் கோவிலில் மூலவர் சிலையை வடித்த போகர் சித்தருக்கு கோவிலில் தனி சன்னதி உள்ளது. இங்கு விசேஷ நாட்கள் மட்டுமன்றி தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வருகிற 18-ந்தேதி போகர் ஜெயந்தி நாளாகும். இதையொட்டி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமம் சார்பில் பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழா நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலிப்பாணி ஆசிரமம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதையடுத்து பழனி புலிப்பாணி ஆசிரம நிர்வாகி சிவானந்த புலிப்பாணி சுவாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதைபோல், எத்தனையோ தடைகள் விதித்தபோதிலும் பழனியில் போகர் ஜெயந்தி விழா நடத்த அனுமதி வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வருகிற 18-ந் தேதி போகர் ஜெயந்தி விழா நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.