19 மாட்டு வண்டிகளில் சென்ற பக்தர்கள்
மதுரை அழகர்கோவிலுக்கு பழமை மாறாமல் 19 மாட்டு வண்டிகளில் பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.
திருப்பத்தூர்
மதுரை அழகர்கோவிலுக்கு பழமை மாறாமல் 19 மாட்டு வண்டிகளில் பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.
மாட்டு வண்டிகளில் பயணம்
சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் வேலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராம நாட்டார்களின் உறவின் முறையார்கள், பங்காளிகள் தலைமுறை தலைமுறையாக மாட்டுவண்டியில் அழகர்கோவிலில் உள்ள குலதெய்வத்தினை வணங்குவதற்கு மாட்டுவண்டியில் பயணிப்பதை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு பயணமாக நேற்று முன்தினம் வேலங்குடி பிள்ளையார்கூடத்திலிருந்து 19 வண்டிகளில் மாடுகள் பூட்டி புறப்பட்டார்கள். முதல்நாள் பயணம் மேற்கொண்ட இவர்கள் நேற்று வேலங்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக திருப்பத்தூர் வந்தடைந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு எஸ்.எஸ்.கோட்டை வழியாக சென்று மேலூரில் தங்கினர். பின்னர் அங்கிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீண்டும் மாட்டு வண்டிகளில் புறப்பட்டு அழகர்கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு தீர்த்தமாடுதலில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
கிடாய் வெட்டி நேர்த்திக்கடன்
பின்னர் தங்களது நேர்த்திக் கடனாக கிடாய் வெட்டி சாமிக்கு பலியிட்டு வழிபடுகின்றனர். இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்குகின்றனர். பின்னர் மீண்டும் மாட்டு வண்டிகளில் தங்கள் ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.
தற்போது வளர்ந்துவரும் விஞ்ஞான வளர்ச்சியிலும் போக்குவரத்து துறையில் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும், இன்றளவும் குல தெய்வ வழிபாட்டிற்கு மாட்டுவண்டி பயணத்தை கடைபிடிக்கிறோம். இது இறைவனுக்கு செய்யும் கடமையாகவும், இந்த மாட்டு வண்டி பயணம் எங்கள் முன்னோர்களுக்கு செய்யும் மரியாதையாகவும் இன்றளவும் பின்பற்றி வருவதாக அந்த பக்தர்கள் கூறினர்.