விசைப்படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 19 மீனவர்கள்


விசைப்படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 19 மீனவர்கள்
x

குமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற போது விசைப்படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 19 மீனவர்களை மற்றொரு விசைப்படகில் வந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

குமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற போது விசைப்படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 19 மீனவர்களை மற்றொரு விசைப்படகில் வந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடலில் மூழ்கிய விசைப்படகு

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட் (வயது 41), மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு ஓட்டுனர் மதன் உள்பட மொத்தம் 19 மீனவர்கள் கடந்த 22-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் 7 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.

55 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பலத்த காற்று வீசியதாக தெரிகிறது. இதனால் எழுந்த ஆக்ரோஷ அலையில் சிக்கிய விசைப்படகு மெல்ல மெல்ல கடலில் கவிழ்ந்தது. இதனை கவனித்து சுதாரித்துக் கொண்ட மதன் உள்பட 19 மீனவர்களும் உயிரை காப்பாற்ற கடலில் குதித்தனர். பின்னர் கடல் அலையின் வேகத்துக்கு இடையே மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

19 மீனவர்கள் மீட்பு

அப்போது அந்த வழியாக மற்றொரு விசைப்படகு வந்தது. அந்த விசைப்படகை பார்த்ததும் தத்தளித்த மீனவர்கள், இனி பிழைத்து விடலாம் என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மேலும் தங்களை காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். உடனே அந்த விசைப்படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்த 19 பேரையும் பத்திரமாக மீட்டு தங்களுடைய படகில் ஏற்றினர்.

இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட மீனவா்கள் அனைவரையும் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் விசாரணை நடத்தினர்.

நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியதால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்ததாகவும், அதில் இருந்த மீன்களும் நாசமானதாகவும் மீனவர் ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story