நகைக்கடையில் ரூ.19 லட்சம் நகை மோசடி
கோவை காந்திபுரத்தில் உள்ள நகைக்கடையில் ரூ.19 லட்சம் நகையை மோசடி செய்த அந்த கடையின் உதவி மேலாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கோவை
கோவை காந்திபுரத்தில் உள்ள நகைக்கடையில் ரூ.19 லட்சம் நகையை மோசடி செய்த அந்த கடையின் உதவி மேலாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகைக்கடை
கோவை காந்திபுரம் டாடாபாத் பகுதியில் சுமன் ஜூவல்லரி என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடையில் பரமேஸ்வரன் (வயது 57) என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த நகைக்கடையில் வாரத்துக்கு ஒருமுறை நகை இருப்புகளை சரிசெய்வது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் அவர் அந்த கடையில் உள்ள நகைகளின் இருப்புகளை சரி பார்த்தார். அப்போது டாலர்கள், ஆரம், நெக்லஸ் உள்பட ஏராளமான நகைகள் குறைந்தன.
ரூ.19 லட்சம் நகை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உதவி மேலாளர் சசிகுமாரிடம் கேட்டார். அதற்கு அந்த நகைகளை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ததாக அவர் கூறினார். உடனே அவர் அதற்கான பணம் எங்கே என்று கேட்டபோது, சரியான பதிலை தெரிவிக்க வில்லை. தொடர்ந்து கேட்டபோது அந்த நகையை ரூ.19 லட்சத்துக்கு வாடிக்கையாளரிடம் விற்பனை செய்ததாகவும், பணத்தை கொடுத்துவிடுவதாகவும் கூறினார்.
மேலும் அவர் ரூ.19 லட்சத்துக்கான காசோலையை மேலாளரிடம் கொடுத்தார். அவர் அந்த காசோலையை வங்கியில் வசூலுக்கு போட்டபோது அதில், கையெழுத்து சரியாக பொருந்தவில்லை என்று அந்த காசோலை திரும்பி வந்தது.
3 பேர் மீது வழக்கு
இது தொடர்பாக சசிகுமாரிடம் பலமுறை கேட்டபோதும் அவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. அப்போதுதான் சசிகுமார் அந்த கடையில் வேலை செய்து வரும் ஊழியர்களான விஜயன், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து ரூ.19 லட்சம் நகையை மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து மேலாளர் பரமேஸ்வரன் காட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சசிகுமார், விஜயன், ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.