தமிழக மீனவர்கள் 19 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
சென்னை,
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.
இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் பெயர் மற்றும் கூடுதல் விவரங்கள் இலங்கை கடற்படை விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.
மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்