காலை உணவு திட்டத்தில் 19 ஆயிரத்து 26 மாணவர்கள் பயனடைவர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் 19 ஆயிரத்து 26 மாணவர்கள் பயனடைவர் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் 19 ஆயிரத்து 26 மாணவர்கள் பயனடைவர் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
காலை உணவு திட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகில் ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., நிவேதா முருகன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கூறுகையில்,
மயிலாடுதுறை மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டமானது செம்பனார்கோயில், சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், மயிலாடுதுறை ஆகிய 5 ஒன்றியங்களுக்குட்பட்ட 386 தொடக்கப் பள்ளிகளிலும், மணல்மேடு, குத்தாலம், வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட 6 தொடக்கப் பள்ளிகளிலும் என மொத்தம் 392 தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
19 ஆயிரத்து 26 மாணவர்கள்
இந்த திட்டத்தின் மூலம் 19 ஆயிரத்து 26 மாணவர்கள் பயன் பெறுவார்கள். மேலும், காலை உணவு திட்டத்தின் கீழ் திங்கட்கிழமைகளில் சேமியா உப்புமா, காய்கறி சாம்பாரும், செவ்வாய் கிழமைகளில் ரவா காய்கறி கிச்சடி, சாம்பார், புதன்கிழமைகளில் வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமைகளில் அரிசி உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமைகளில் கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஞானவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துலட்சுமி ராஜசேகர், ஆறுபாதி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி கலியபெருமாள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சுசிலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, விஜயலெட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.