திருச்சி மண்டலத்தில் 191 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 505 பேர் கைது


திருச்சி மண்டலத்தில் 191 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 505 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2023 12:48 AM IST (Updated: 9 July 2023 5:51 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மண்டலத்தில் கடந்த 6 மாதங்களில் 191 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 505 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி மண்டலத்தில் கடந்த 6 மாதங்களில் 191 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 505 பேர் கைது செய்யப்பட்டனர்.

முறைகேடுகள்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தொடர்ந்து வாகன சோதனைகளில் ஈடுபடவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், ரேஷன் அரிசி அரவை ஆலைகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஐ.ஜி. காமினி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு த்துறைக்கு உட்பட்ட மாவட்டங்களான திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கடந்த 6 மாதங்களில் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

83 வாகனங்கள் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 9 மாவட்டங்களிலும் 489 வழக்குகள் பதிவு செய்து 505 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 191 டன் ரேஷன் அரிசி, 211 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட 198 வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் இவற்றை கடத்துவதற்கு பயன்படுத்தியதாக 42 நான்குசக்கர வாகனங்கள், 41 இருசக்கர வாகனங்கள் என்று 83 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மண்டலத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 41 பேரில் 29 பேர் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நன்னடத்தை பிணையம் வழங்கியுள்ளனர்.

இந்த தகவலை திருச்சி மண்டல குடிமைப்பொருள் அதிகாரிகள் தெரித்துள்ளனர்.


Related Tags :
Next Story