பா.ஜனதாவை சேர்ந்த 196 பேர் கைது
ராமநாதபுரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 196 பேர் கைதாகினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 196 பேர் கைதாகினர்.
முற்றுகை போராட்டம்
சனாதன ஒழிப்பு மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசிய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை கண்டித்தும், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி முன்னிலை வகித்தார். ஓ.பி.சி. மாநில தலைவர் சுரேஷ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகராஜா, மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன், மகளிர் அணி மாநில துணைத்தலைவர் கலைராணி, ராமநாதபுரம் நகர் தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
196 பேர் கைது
இவர்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தினை முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் 28 பெண்கள் உள்பட 196 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.