மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 19,877 பேர் எழுதுகின்றனர்


மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 19,877 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 23 Feb 2023 5:45 PM GMT (Updated: 23 Feb 2023 5:45 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை 19,877 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான விடைத்தாள்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் வருகிற மார்ச் மாதம் 13-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வும், 14-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்குகிறது. இதற்கான ஆயத்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் 198 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்-2 தேர்வை இந்த ஆண்டு 19 ஆயிரத்து 877 பேரும், பிளஸ்-1 தேர்வை 17 ஆயிரத்து 810 பேரும் எழுத விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

விடைத்தாள் அனுப்பும் பணி

இந்த நிலையில் மேல்நிலைக்கல்வி மாணவ, மாணவிகளுக்கான விடைத்தாள்கள் ஏற்கனவே அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு விடைத்தாள்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அந்தந்த பள்ளிகளின் தேவைக்கேற்ப விடைத்தாள் கட்டுகளை, பள்ளி பொறுப்பாளர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

இன்று (வியாழக்கிழமை) முதல் தேர்வு மையங்களில் 'டாப் ஷீட்டுடன்' விடைத்தாள்களை இணைத்து தைக்கும் பணி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story