19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: கடற்கரையில் உறவினர்கள்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி


19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: கடற்கரையில் உறவினர்கள்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
x

சுனாமி நினைவு தினத்தையொட்டி, சுனாமியால் பலியானவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் நாகை கடற்கரையில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நாகப்பட்டினம்,

இந்தோனேஷிய கடற்பரப்பில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி எனும் அழிப்பேரலை உருவானது. அதன் தாக்கத்தால் பல்வேறு நாடுகளின் கடலோர பகுதிகளை ஆழிப்பேரலை வாரி சுருட்டியது.

இதில் தமிழகத்தில் ஏராளமான உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.

19-ம் ஆண்டு நினைவு தினம்

நெஞ்சை விட்டு அகலாத இந்த கோர சம்பவத்தை நினைவு கூரும் வகையில் நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் சுனாமி பேரலைகள் தாக்கியதின் 19-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி நாகை நம்பியார்நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் இறந்தவா்களின் உறவினா்கள் தர்ப்பணம் செய்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடற்கரைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மவுன ஊர்வலம்

நாகையை அடுத்த கீச்சாங்குப்பத்தில் சுனாமி நினைவு தூண் முன்பு பொதுமக்கள் சார்பில் ஆத்மசாந்தி யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் நினைவு தூணில் மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவ-மாணவிகளின் மவுன ஊர்வலம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோர பகுதிகளான பூம்புகார், தரங்கம்பாடி, திருமுல்லைவாசல் பகுதிகளில் சுனாமி நினைவு தினத்தைெயாட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தரங்கம்பாடியில் கடற்கரையில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். மற்ற இடங்களில் நினைவு தூணில் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி

மேலும், குமரி மாவட்டத்தில் மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி, சொத்தவிளை, குளச்சல், கொட்டில்பாடு, பிள்ளைதோப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களிலும் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. அதன்படி கொட்டில்பாடு பகுதியில் 199 பேர் பலியானார்கள். அவர்களது உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அதனை நினைவு கூறும் வகையில் அந்த பகுதியில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறாத வடுவை ஏற்படுத்திய சுனாமியின் 19-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி பகுதியில் இறந்தவர்கள் நினைவாக முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.


Next Story