1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது: பள்ளி கல்வித்துறை உத்தரவு
1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் 1, 2-ம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிகளில் பறக்கும் படை உறுப்பினர்களை கொண்டு ஆய்வு செய்து தொகுப்பு அறிக்கை அளிக்க அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த 2018, 2021 மற்றும் நடப்பு ஆண்டுகளில் கேட்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதுதொடர்பாக சில மாவட்டங்களில் எந்த ஒரு அறிக்கையும் பெறப்படாமல் இருப்பதாகவும், தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதனை வலியுறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆய்வு செய்ய உத்தரவு
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களில் பள்ளிகளில் 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஆய்வுசெய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வில் எந்தெந்த பள்ளிகளில் அவ்வாறு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக குறிப்பிட்டு, வட்டாரக்கல்வி அலுவலர்கள் வழங்கவும், அதனை பெற்று பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் அரியலூர் மாவட்ட கல்வித்துறைக்கு, இதுபோன்ற ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அது தொடர்பான நடவடிக்கையை எடுக்க வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.