2 பேரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
கோவையில் 2 பேரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் துப்புரவு தொழிலாளி சஞ்செய். இவர் தனது உறவினரான தமிழழகனுடன் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி கோவை பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள சி.எம்.சி. காலனி கருப்பராயன் கோவில் அருகே சென்று கொண்டு இருந்தார்.அப்போது அதேப்பகுதியை சேர்ந்த பாபு (வயது 32), சின்னவன் என்கிற கிருஷ்ணன் ஆகியோர் அங்கு வந்தனர்.
இந்த நிலையில் திடீரென்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சஞ்செய் வயிற்றில் குத்தினார். இதை தடுக்க வந்த தமிழழகனை கத்தியால் குத்தினார். பின்னர் பாபுவும், சின்னவனும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
கோர்ட்டில் வழக்கு
இது குறித்து தகவல் அறிந்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் ஏற்பட்ட 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர்கள் குணமானார்கள். இந்த வழக்கில் தலைமறைவான பாபு, சின்னவன் ஆகியோரை உக்கடம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோவையில் உள்ள முதலாவது கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதனால் பாபு, சின்னவன் ஆகியோர் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.
கோவையில் 2 பேரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட பாபுவுக்கு கொலை முயற்சி செய்தல் பிரிவுக்கு 7 ஆண்டு சிறையும், 5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு பிரிவுக்கு ஒரு ஆண்டு சிறையும், ரூ.1000 அபராதமும், அபராத தொகையை செலுத்ததவறினால் மேலும் 4 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி நம்பிராஜன் தீர்ப்பு கூறினார்.
மேலும் இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சின்னவன் விடுதலை செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதாடினார்.