ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது


ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது
x

சேலம் பகுதியில் ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்

செல்போன்கள் திருட்டு

சேலம் ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் இயங்கும் ரெயில்களில் பயணிகளின் உடமைகள், செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போய் வருவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் செல்லும் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் தூங்கும் பயணிகளிடம் இருந்து செல்போன்களை ஒரு கும்பல் திருடி செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கும்பலை பிடிக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

2 பேர் கைது

அதன்படி, சேலம் வழியே கோவை, கேரளா செல்லும் ரெயில்களில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, சேலம் பகுதியில் சந்தேகம்படும்படி ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடி வந்ததும், உத்திர பிரதேச மாநிலம் பதோனிகீதல் பூர் கிராமத்தை சேர்ந்த பரதம்பட்டேல் (வயது 22), பீகார் மாநிலத்தை சேர்ந்த சம்சுதீன் ஆலம் (21) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் திருப்பூர் பாப்பாத்திநகரில் வீடு வாடகை எடுத்து தங்கி சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதியில் செல்லும் ரெயில்களில் ஏறி முன்பதிவு பெட்டிகளில் தூங்கி கொண்டிருக்கும் பயணிகளின் செல்போன்களை திருடியது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த செல்போன்கள் திருட்டில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story