கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

பள்ளிபாளையம் அருகே ஜவுளி அதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். ஜவுளி அதிபர். இவரது தந்தை மணி (வயது 70), தாய் பழனியம்மாள். இந்தநிலையில் அவர்கள் கடந்த 8-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது காரில் வந்த 12 பேர் கொண்ட கும்பல் மணியை கட்டிபோட்டு பழனியம்மாளை மிரட்டி ரூ.28 லட்சம், 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த கொள்ளை வழக்கில் நேற்று முன்தினம் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் திருச்சி லால்குடியை சேர்ந்த ரெனால்ட் (30), முக்கிய குற்றவாளியான டிரைவர் ராமராஜன் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் 2 பேரிடமும் விசாரணை செய்தார். அவர்களிடமிருந்து ரூ.85 ஆயிரத்து 300 பறிமுதல் செய்தனர். இதையடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் அவர்களை ஒப்படைத்தனர்.






