பள்ளிபாளையத்தில் தையல் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 46). தையல் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் ஜாமீன் கையெழுத்திட்டு ரூ.4 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வாங்கிய கடனை செலுத்த ஜெகனிடம் நிதி நிறுவனத்தினர் கூறினர். ஆனால் அவர் செலுத்தாததால் ஜாமீன் போட்ட ஜெயபாலிடம் பணம் செலுத்த வேண்டும் என நிதி நிறுவனத்தினர் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஜெயபால், ஜெகன் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜெகன், நாகராஜ், கேசவன் ஆகியோர் சேர்ந்து ஜெயபாலை பிளாஸ்டிக் குழாயால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த ஜெயபால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீசார் ஜெகன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கேசவனை தேடி வருகின்றனர்.