நகை திருடிய 2 பேர் கைது


நகை திருடிய 2 பேர் கைது
x

ராசிபுரம் அருகே நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

நகை திருட்டு

ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம் குடி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). விவசாயி. கடந்த மாதம் 15-ந் தேதி கண்ணன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் தனது வேலைகளை முடித்துக் கொண்டு மதியம் வீட்டுக்கு வந்த கண்ணன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கக்காசு, மோதிரம் உள்பட 2 பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கண்ணன் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று ராசிபுரம் போலீசார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

அப்போது அவர்கள் தேங்கல்பாளையத்தில் நகை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சேலம் மாவட்டம் மேட்டுபட்டியை சோ்ந்த ரமேஷ் (30), தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சேட்டு என்கிற பெருமாள் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 5½ பவுன் நகைகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரமேஷ் மற்றும் சேட்டு என்கிற பெருமாள் இருவரையும் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்கள் மீது தாரமங்கலம், எடப்பாடி, பனமரத்துப்பட்டி, கெங்கவல்லி போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story