லாரியில் கடத்த முயன்ற 100 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்த முயன்ற 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நல்லம்பள்ளி
குட்கா கடத்தல்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள வெள்ளக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தொப்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி அதில் இருந்த டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது லாரியை பின் தொடர்ந்து ஒரு கார் வந்தது. போலீசாரை பார்த்ததும், அந்த காரை நிறுத்தி விட்டு, அதில் இருந்து 3 பேர் தப்பி ஓடினர்.
இதனால் போலீசார் சந்தேகம் அடைந்து, லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான 100 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவரான சேலம் மாவட்டம் காடையாம்பட்டி சந்தைபேட்டையை சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (வயது 27), அதே பகுதியை சேர்ந்த பாலசந்தர் (31) ஆகியோரிடம் போலீசார் விசாரணைநடத்தினர்.
வலைவீச்சு
விசாரணையில், பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு குட்கா கடத்தி செல்ல முயன்றதும், இதற்கு உடந்தையாக காரில் வந்தவர்கள் செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜயகுமார், பாலசந்தரை கைது செய்தனர்.
மேலும் லாரி மற்றும் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.