மாற்றுத்திறனாளி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மொபட்டை பறித்து சென்ற 2 பேர் கைது


பெரம்பலூரில் மாற்றுத்திறனாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மொபட்டை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூர்

செல்போன் பழுது நீக்கும் கடை

பெரம்பலூர் ரோவர் நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 41), மாற்றுத்திறனாளி. இவர் பெரம்பலூர் காமராஜர் வளைவில் கடந்த 8 ஆண்டுகளாக செல்போன் பழுதுநீக்கும் கடையை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் பிரபுவும், அவரது கடையில் வேலை பார்க்கும் பிரதீப்பும் கடையை திறப்பதற்காக, பிரபுவின் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த 2 நபர்கள் உதவி கேட்பது போல் பிரபுவின் மொபட்டை தடுத்து நிறுத்தினர். அவர்கள் 2 பேரும் பிரபுவிடம் பணம் கேட்டனர். அதற்கு பணம் இல்லை என்று கூறி அவர் மொபட்டில் செல்ல முயன்றார்.

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல்

அப்போது அவர்கள் 2 பேரும் தாங்கள் ரவுடிகள் என்று கூறி பிரபுவையும், பிரதீப்பையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் அவர்கள் பிரதீப்பை மொபட்டில் இருந்து கீழே இறக்கி விட்டனர். பின்னர் அவர்கள் பிரபுவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.500 மற்றும் செல்போனை எடுத்து விட்டனர். இதையடுத்து மொபட்டில் இருந்து பிரபுவை கீழே இறங்குமாறு கூறினர்.

அதற்கு பிரபு மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஒரு ஆம்புலன்சும் அந்த வழியாக செல்ல முடியாமல் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

மொபட்டை பறித்து கொண்டு தப்பினர்

மேலும் அவர்கள் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதால், அவர்கள் கலைந்து சிதறி ஓடினர். இதனைக்கண்ட அருகே உள்ள கடைக்காரர்கள் தங்களது கடைகளை மூடினர். இதனால் வேறு வழியின்றி பிரபு மொபட்டில் இருந்து இறங்கினார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் பிரபுவிடம் இருந்து மொபட்டை பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வந்தார்.

சிறையில் அடைப்பு

அதில் ஒருவர் பெரம்பலூர் மேரி புரத்தை சேர்ந்த ஹரிகரன் (47) என்பதும், மற்றொருவர் சேலம் மாவட்டம், கொண்டலாம் பட்டியை சேர்ந்த ரமேஷ் என்கிற கருணாகரன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஹரிகரன், கருணாகரன் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில் பெரம்பலூர் சகர போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையிலான குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் இருந்து பிரபுவின் மொபட், செல்போன், பணம் மற்றும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒரு மொபட், 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சேலம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட 2 மொபட், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story