அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 43). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் கீழப்பழுவூருக்கு பஸ்சை ஓட்டி சென்றபோது வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மகன் சரண்ராஜ் (22), விக்னேஷ்வரன் (24) மற்றும் சேட்டு என்பவரின் மகன் ஜனார்த்தனன் ஆகிய 3 பேரும் பஸ் படியில் நின்று கொண்டு பயணம் செய்தனர். இதனை கண்ட டிரைவர் முருகானந்தம் அவர்களை சீட்டில் அமருமாறு கூறியுள்ளார். இந்தநிலையில் வெற்றியூர் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது 3 வாலிபர்களும் டிரைவர் முருகானந்தத்தை தகாத வார்த்தைகளால் திட்டி பஸ்சில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசில் முருகானந்தம் புகார் அளித்தார். இதன்பேரில் சரண்ராஜ் மற்றும் விக்னேஷ்வரனை போலீசார் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜனார்த்தனனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.