தனியார் வங்கி ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது
தனியார் வங்கி ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது
கடன் தொகை வசூலிக்க வீடுதேடி சென்ற தனியார் வங்கி ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் வங்கி ஊழியர்
நாகை அருகே மருங்கூர் வேலங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் மார்கோனி (வயது 24). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்த வங்கியில் கடன் பெற்ற மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிட்டப்பா தெருவை சேர்ந்த விஜயா என்பவரிடம் மாத தவணை தொகையை வசூல் செய்வதற்காக அவரது வீட்டிற்கு மார்கோனி சென்றுள்ளார். அப்போது விஜயாவின் வீட்டின் வாசலில் நின்றிருந்த அவரது மருமகள் பொன்மொழியிடம் விஜயா எங்கே என்று கேட்டதோடு, அவர் கட்ட வேண்டிய தவணைத் தொகையையும் கேட்டுள்ளார். அப்போது பொன்மொழி தன்னிடம் ஏன் இதனை கேட்கிறாய் என்று மார்கோனியை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
தாக்குதல்
இதையடுத்து மார்கோனி பணிக்கு வந்துள்ளார். அப்போது மார்கோனிக்கு விஜயாவின் கணவர் திலகர் போன் செய்து தவணைத் தொகையை உடனே செலுத்துவதாக கூறி அழைத்துள்ளார். இதையடுத்து மார்கோனி, தனது வங்கியில் பணிபுரியும் மற்றொரு ஊழியர் பாலமுருகன் என்பவரை அழைத்து கொண்டு விஜயா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜயா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அவரது மகன் தினேஷ் தனது மனைவியிடம் எப்படி தவணை தொகை கேட்கலாம் என கேட்டுள்ளார். பின்னர் தினேஷ், அவரது தம்பி பிரவீன்குமார் மற்றும் உறவினர்கள் சரண்ராஜ், சூர்யா ஆகிய 4 பேரும் சேர்ந்து மார்கோனியையும், பாலமுருகனையும் சரமாரியாக தாக்கினர்.
2 பேர் கைது
இதில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மார்கோனி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார், தினேஷ் (31) மற்றும் பிரவீன் குமார் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சரண்ராஜ், சூர்யா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.