நண்பரை அடித்து கொலை செய்த 2 பேர் கைது
பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் நண்பரை அடித்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தகராறு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 32). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி மணி தனது நண்பர்களான பெரம்பலூர் துறை மங்கலம் மனோஜ், செங்குணம் பாலம்பாடி அழகுதுரை ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த மனோஜ், அழகுதுரை ஆகியோர் மணியை சரமாரியாக அடித்து கீழே தள்ளி உள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
2 பேர் கைது
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த மணியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மணியின் மனைவி பானுப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை அடித்து கொலை செய்த மனோஜ் மற்றும் அழகுதுரை ஆகியோரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் மனோஜ் மற்றும் அழகுதுரை ஆகியோர் 4 ரோடு பகுதியில் சுற்றிக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.