அ.ம.மு.க. நிர்வாகி கொலையில் 2 பேர் கைது
அ.ம.மு.க. நிர்வாகி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லையில் நடந்த அ.ம.மு.க. நிர்வாகி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அ.ம.மு.க. நிர்வாகி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்ற மணி (வயது 40). இவர் கருங்குளம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியாக இருந்து வந்தார்.
இவர் நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரெயில்வே பீடர் சாலையில், பழைய கார்களை வாங்கி அதனை உடைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும் உதிரிபாகங்கள் விற்பனை கடையும் நடத்தி வந்தார். இதனால் குடும்பத்துடன் பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார்.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் வேலை முடிந்ததும் காரில் வீட்டுக்கு சென்றார். அங்கு காம்பவுண்டு சுவருக்கு வெளியே காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி நடந்து சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் திடீரென சுப்பிரமணியனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், உதவி கமிஷனர் பாலமுருகன், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் கைது
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சுப்பிரமணியன் கடந்த 2 மாதங்களாக தனது சொந்த ஊரான தெற்கு காரசேரியில் வீடு கட்டி வந்தார். அந்த இடம் தொடர்பாக அவரது உறவினர் சுப்பையா என்பவருக்கும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு இந்த பிரச்சினையில் சுப்பிரமணியனுக்கும், சுப்பையா மகன் மாடசாமி, சுப்பையாவின் தங்கை மகன் இசக்கியப்பன் ஆகியோருக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணியனை அவர்கள் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்து உள்ளது.
இதுதொடர்பாக ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து, மாடசாமி (20), இசக்கியப்பன் (25) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.