நிதி நிறுவனம் நடத்தி ரூ.1¼ கோடி மோசடி 2 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1¼ கோடி மோசடி 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ஆனந்தன்(வயது 47). இவரும் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் முட்டை காலனி பகுதி சின்னராசு மகன் தனசேகர்(41) என்பவரும் கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் பி.ஜி.அக்னி பாலம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் முடியனூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி அமுதா(40) என்பவர் உறுப்பினராக சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளார். மேலும் தனசேகர் கூறிய ஆசை வார்த்தையை நம்பி அமுதா மேலும் 20 பேரை சேர்த்து விட்டு பணம் கட்ட வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு வரை ரூ.1¼ கோடி சீட்டு பணம் கட்டியதாகவும் இதற்கு ரசீது கொடுத்த நிதி நிறுவனம் சீட்டு பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு ஆனந்தன், தனசேகர் இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதன் பிறகு அவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு உடனே பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று கூறி காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தனர்.
இதையடுத்து அமுதாவும், அவரது உறவினர்களும் ஆனந்தன், தனசேகர் ஆகியோரின் சொந்த ஊருக்கு சென்று அவர்களை பற்றி விசாரித்தபோது தேனி மாவட்ட போலீசாரால் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வந்த இருவரும் தற்போது மதுரை ரிசர்வ் காலனிபகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் அமுதா மற்றும் அவரது உறவினர்கள் மதுரைக்கு சென்று ஆனந்தன், தனசேகர் ஆகிய இருவரையும் பிடித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்தனர். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தன், தனசேகர் இருவரையும் கைது செய்தனர்.